அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது ரூ.2.05 கோடி மோசடி புகார்: போலீஸ் கமிஷனர் ஆபீசில் பாதிக்கப்பட்டவர் மனு

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.05 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்பட 3 பேர் மீது பாதிக்கப்பட்டவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்த சண்முகநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர் சுதாகர். 2014ல் துரை என்பவரிடம் இருந்து அரசு வேலைக்காக ஆனந்த், ரேகா, பிரவீன், யுவராஜ், ஜானகி ஆகியோருக்காக கண்ணன் மற்றும் எனது முன்னிலையில் சுதாகரிடம் ரூ.14 லட்சம் பணம் கொடுத்தேன். 2016 நவம்பர் மாதம் அருள்ராஜ், நீலமுரளி என்பவருக்காக ரூ.34 லட்சம் பணத்தை தலைமை செயலகத்தில் சுதாகரிடம் கொடுத்தேன்.

அதேபோல், 2016 டிசம்பர் மாதம் அரசு வேலைக்காக ரமாதேவிக்காக பழனிவேலும் என்பவர் முன்னிலையில் ரூ.7 லட்சம் பணம் கொடுத்தேன். 2019 டிசம்பர் மாதம் தேவி, அஜீத்குமார், செந்தில்குமார், மன்மதராஜ், கணபதி, வெற்றிவேல், ஜீவிதா, வீரமணி ஆகியோருக்காக மாரியப்பன் மற்றும் ரவிச்சந்திரன் முன்னிலையில் ரூ.21.65 லட்சத்தை சுதாகரிடம் கொடுத்தேன். மேலும், 2020 ஜனவரி மாதம் சிவகுமார், ஜெயக்குமார், காமேஷ், இப்ராஹீம் ஆகியோருக்கு அரசு வேலைக்காக ரூ.8 லட்சம் பணம் சுதாகரிடம் கொடுத்தேன். 2020 மார்ச் மாதம் அரசு பணிக்காக  சார்லஸ், சிவபாரதி, ஆதித்யா, ராஜசிவம், ஷீலாராணி, பாலாஜி ஆகியோருக்காக ரூ.60.95 லட்சம் பணத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்தேன்.

சுதாகர், அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் மொத்தம் ரூ.2.05 கோடி கொடுத்தேன். ஆனால் அரசு வேலை கொடுக்கவில்லை ‘முழு பணத்தையும் அமைச்சரிடம் கொடுத்துவிட்டேன். விரைவில் வேலை கிடைத்துவிடும்’ என்று சுதாகர் கூறினார்.ஆனால் யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை கேட்டேன். உடனே சுதாகர், ராஜேந்திர பாலாஜியிடம் அழைத்து சென்றனர். சிறிது நாட்களில் முடித்து கொடுத்து விடுகிறோம் என்றார் ராஜேந்திர பாலாஜி. அதன் பிறகும் அரசு வேலை வாங்கி தரவில்லை.  

இதனால் நான் சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டபோது, நான் பணத்தை அமைச்சரிடம் கொடுத்துவிட்டேன். நீ போய் அவரை பார்த்து கேட்டுக்கொள். இனிமேல் எங்களிடம் வந்து பணத்தை கேட்டால், உன்னை ஆட்களை வைத்து அடித்து கொன்று கூவத்தில் போட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.05 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: