அரூர் கூட்டுறவு சங்கத்தில் ₹90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

அரூர் : அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள், பருத்தி ஆகியவை ஏலம் விடப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் விளை பொருட்களை மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் என பெரிய அளவிலான வியாபாரிகள் வந்து வாங்குவதால் விலை அதிகம் கிடைக்கிறது.

அதன்படி அரூர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் ஏலத்திற்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து 460 விவசாயிகள், 2,100 மூட்டை மஞ்சளை கொண்டுவந்திருந்தனர். சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ₹6,102 முதல் ₹8,642 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ₹5,809 முதல் ₹7,269 வரையிலும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 2,100 மூட்டை மஞ்சள் ₹90 லட்சத்திற்கு ஏலம் போனது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், ‘இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வந்தது ஆனால், சேலத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடப்பதால், இந்த ஆண்டு முதல், அரூர் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் திங்கட்கிழமை நடைபெறும் என்றனர்.

Related Stories: