ஒப்பந்ததாரரிடம் ₹3.53 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் சேலம் சிறையில் அடைப்பு-ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம் குறித்து விசாரணை

சேலம் : ஆத்தூர் அருகே ஒப்பந்ததாரரிடம் ₹3.53 லட்சம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிறையில் அடைக்கப்பட்டார். சேலத்தில் ஜன்னலில் வீசப்பட்ட பணம் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரகனூர் தெற்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக உள்ளார். கடந்த ஆண்டு தெடாவூர் முதல் தம்மம்பட்டி வரையில் உள்ள சாலையை, ₹6.93 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி, இரு வழிச்சாலையாக மாற்ற டெண்டர் விடப்பட்டது.

இதில் சுந்தர்ராஜூக்கு ஒப்பந்தம் கிடைத்தது. இதற்கான அக்ரிமென்ட் போட, ஆத்தூரில் உள்ள உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்திற்கு சுந்தர்ராஜ் சென்றார். அப்போது, அங்கிருந்த உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் (55),  ₹78.53 லட்சம் கண்காணிப்பு பொறியாளருக்கு லஞ்சமாக தர வேண்டும் எனவும், முன்பணமாக 0.50 சதவீதமான ₹3.50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்த சுந்தர்ராஜ், அவர்கள் கூறியபடி, நேற்று முன்தினம் மாலை ₹3.50 லட்சத்தை, சந்திரசேகரனிடம் கொடுத்தார். அங்கிருந்த லஞ்சஒழிப்பு போலீசார் சந்திரசேகரனை கையும், களவுமாக பிடித்து, ₹3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், லஞ்சப்பணத்தை சேலம் கண்காணிப்பு பொறியாளருக்கு கொடுப்பதற்காக பெற்றதாக கூறினார்.

இதனையடுத்து, சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக ₹81 ஆயிரம் பணத்தை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குரங்குச்சாவடியில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஆத்தூரில் லஞ்சம் ெபற்ற உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேசமயம், சேலம் பொறியாளர் அலுவலகத்தில் ஜன்னல் வழியாக வீசப்பட்ட பணம் யாருடையது? நேற்று முன்தினம் அந்த அலுவலகத்திற்கு யார், யார் வந்து சென்றார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Related Stories: