கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை கடலில் 13 மணி நேரம் நீந்தி வாலிபர் சாதனை

திருச்செந்தூர் :  தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்திகேயன் (31). நீச்சல் பயிற்சியாளரான இவர், கொரோனா விழிப்புணர்வு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முன்தினம் முன்தினம் அதிகாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நீச்சலை தொடங்கினார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்ஐ ரென்னிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  மாலை 6.05 மணிக்கு திருச்செந்தூர் கோயில் கடற்கரையை கார்த்திகேயன் வந்தடைந்தார். தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை முதல் திருச்செந்தூர் கோயில் வரை 46 கிமீ தூரத்தை தொடர்ந்து 13 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை குளோபல் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கார்த்திகேயனை கடலோர காவல் படை திருச்செந்தூர் எஸ்ஐ கோமதிநாயகம், ஜீவா நகர் பகுதி மீனவர்கள், மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். அவருக்கு மகுடம் சூட்டி, மாலை மரியாதை செய்தனர்.இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், கொரோனா மீண்டும் பரவக்கூடிய நிலையில் தமிழக அரசு முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் முகக்கவசம் அணிந்து வரக்கூடிய மக்கள், அதை கடற்கரையோரங்களில் அப்படியே விட்டுச் செல்வதால், கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படுகின்றன. இவை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதால், அவற்றை கடற்கரையில் விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்துக் கூறுவதற்காகவும் தூத்துக்குடி கடலில் இருந்து திருச்செந்தூர் வரை 46 கிமீ தூரம் நீந்தினேன். இதற்கான முழு ஊக்கத்தை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தந்ததால், இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றார்.

கார்த்திகேயன் கடலில் பாதுகாப்பாக நீந்திச் செல்ல உயிர் காப்பாளர்கள் மற்றும் பிசியோதெரபி டாக்டர் ஆண்டனி விமன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோசுவா செய்திருந்தார்.

Related Stories: