லத்தூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

செய்யூர்: லத்தூர் ஒன்றியம் மற்றும் இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் எம்பி செல்வம் கலந்துகொண்டு, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் சீக்கினாங்குப்பம் கிராமத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வட்டார சுகாதார திருவிழா, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் கங்காதரன் வரவேற்றார். எம்பி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,  குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்கு சூரணம் மாத்திரைகள் வழங்கினார். முகாமில், அப்பகுதி கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மகப்பேறு மருத்துவம் உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 15 கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம், முதலமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் மூலம்  சிகிச்சை பெற்ற 15 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினார். பின்னர்,  அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்பாடு செய்த ஊட்டச்சத்து கண்காட்சியை  பார்வையிட்டார். நிகழ்ச்சியில்,  காஞ்சி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் தசரதன், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கவுன்சிலர் செல்வகுமார், முன்னாள் கவுன்சிலர் அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், இடைக்கழிநாடு பேரூராட்சி கப்பிவாக்கம் கிராமம் அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சம்யுக்தா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் தீபக் வரவேற்றார். இதில், 600க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில், இடைக்கழிநாடு திமுக பேரூர் செயலாளர் இனியரசு, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, பேரூர் துணை செயலாளர் ரஞ்சித்குமார், மீனவர் அணி அமைப்பாளர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: