ஊத்தங்கரை அருகே பலத்த மழை தகர மேற்கூரை காற்றில் பறந்து வந்து மோதியதில் தலை சிதறி பெண் பலி-கிராமமே சோகத்தில் மூழ்கியது

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே தகர மேற்கூரை காற்றில் பறந்து வந்து மோதியதில் தலை சிதறி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய மாவட்டமான கிருஷ்ணகிரியில் வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், ஊத்தங்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை இல்லாத நிலை காணப்பட்டது.

திடீரென நேற்று மாலை ஊத்தங்கரை பகுதியில் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டு கூரைகள் காற்றில் பறந்தன. ஊத்தங்கரை அருகே கொம்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையில் பணியாற்றக்கூடிய ராமன் மனைவி பச்சையம்மாள்(42) என்பவர், காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது, ராமனின் சகோதரர் கலை வசித்து வரும் வீட்டில் மேற்கூரை நகர்ந்து விடாமல் இருப்பதற்காக முட்டுக் கொடுத்திருந்த சிமென்ட் கல் காற்றில் நகர்ந்தது. இதில், தகர மேற்கூரை பெயர்ந்து காற்றில் பறந்து வந்து பச்சையம்மாள் மீது மோதியது. இதில், தலை சிதறி படுகாயமடைந்த அவர் மூளை வெளியே வந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பலத்த காற்று- மழைக்கு வீட்டுக்கூரை பெயர்ந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: