கோயம்பேடு பஸ் முனையத்தில் தங்கும் ஆதரவற்றோர் கணக்கெடுப்பு துவக்கம்: மாநகராட்சி தீவிரம்; 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் பெற்றோரை இழந்தவர்கள் என ஏராளமானோர் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இந்த நிலையில், சி.எம்.டி.ஏ. நிர்வாகம் சார்பில்,  இவர்களை கணக்கெடுத்து, அதனடிப்படையில் தங்கு இடம், உணவு, ஆடை மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்து, அவர்களை சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சி.எம்.டி. ஏ. உறுப்பினர் செயலர் அன்ஷுல்மிஸ்ரா , அண்ணாநகர் துணைஆணையர் சிவபிரசாத், உதவி ஆணையர் ரமேஷ்பாபு, ஆய்வாளர் குணாசேகர் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இந்த கணக்கெடுக்கும் பணியை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, சி.ம்.டி.ஏ. அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வயது வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முழுமையான கணக்கெடுப்பு முடிந்தபிறகு, அவர்களை மாநகராட்சிக்கு சொந்தமான  இடத்தில் தங்கவைத்து, அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி உள்ள ஆதரவற்றவர்களுக்கு தினமும் மாநகர போலீசார் சார்பில், 3 வேளை உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: