தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசவத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஆதீன கர்த்தரை பல்லக்கில் சுமக்க விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கியுள்ளார். தருமபுரம் ஆதீன மடத்தில் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை ஒட்டி பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்வது வழக்கம். மனிதரை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி சுமந்து செல்வதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து 22ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் கடந்த மாதம் 27ம் தேதி தடை விதித்திருந்தார். இதையடுத்து தருமபுரத்திற்கு அனைத்து ஆதீனங்களும் ஆதரவு தெரிவித்ததோடு பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பல்லக்கு தூக்குபவர்கள் தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஆதீன கர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா செல்வது தங்களின் சமய உரிமை என மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மரபு படி தருமபுரம் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற ஆவணம் செய்வதாக முதல்வர் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை ஒட்டி தருமபுரம் ஆதீன கர்த்தரை பல்லக்கில் சுமந்து உலா செல்ல விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கியுள்ளார்.

Related Stories: