டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மனிதவள மேலாண்மை துரையின் புதிய அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்; அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் போன்ற பணிகளையும் செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் குழுமம் இணைக்கப்படும். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க தனியாக ஒரு சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பணி ஓய்வு ஊதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதை எளிமையாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநில குடிமைப்பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 

Related Stories: