நாங்கள் சொல்வதை தான் செய்வோம்.. செய்வதை தான் சொல்வோம்; விளம்பரங்களுக்காக ஆட்சி செய்யக்கூடிய அரசு அல்ல: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமையிட அலுவலர்களுக்கும் மற்றும் மண்டல  அலுவலர்களுக்கும் வாக்கி டாக்கியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (06.05.2022) சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமையிட அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாக்கி டாக்கியினை (walkie talkie) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் வழங்கினார்கள்.

அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்தாவது, பக்தர்களுக்காக குறை தீர்க்கும் மையம் தொடங்கப்பட்டு குறைகள் களையப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து துறையின் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 கோடி பக்கங்கள் ஒளிவருடல் செய்யப்பட்டுள்ளது. 48 முதுநிலை திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிலங்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் HRCE என்ற எல்லைக்கல் ஊண்டப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் நிலங்களை ரோவர் கருவி மூலம் அளவிடும் பணிகள் துரிதமாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2021-2022 ஆண்டு மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் 1690 பணிகளும், 2022-2023 ஆண்டு மானியக்கோரிக்கையின் போது 165 அறிவிப்புகளில் 2244 பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தவிர்த்து 2021-2022 ல் கிராமப்புற திருப்பணி திட்டத்தின் கீழ் 1250 திருக்கோயில் திருப்பணிகளும், ஆதிதிராவிடர் வாழும் பகுதியில் 1250 திருக்கோயில் திருப்பணிகளும், 2022-2023 ல் கிராமப்புற திருப்பணி திட்டத்தின் கீழ் 1250 திருக்கோயில் திருப்பணிகளும், ஆதிதிராவிடர் வாழும் பகுதி 1250 திருக்கோயில் திருப்பணிகளும் ஆக கூடுதல் 8934 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது,

இப்பணிகளை மேற்கொள்ள கள ஆய்வு, நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல், பணி முன்னேற்றம் ஆகியவற்றை கண்காணித்திடவும் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் சார்நிலை அலுலவர்களிடமும், கள அலுலவர்களிடமும் தலைமையிடத்திலிருந்து ஒருங்கிணைக்கவும், கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் விரைவாக செயலாற்றவும் முதற்கட்டமாக தலைமையிட அலுவலர்களுக்கும், மண்டல இணை ஆணையர்களுக்கும், செயற்பொறியாளர்களுக்கும், மாவட்ட உதவி ஆணையர்களுக்கும் 100 வாக்கி டாக்கி வழங்கப்பட்டது.

மேலும் திருக்கோயில் சொத்துக்களை பார்வையிடுதல், அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பணிகளை செம்மையாக செய்திடவும், திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பாதுகாப்பு பலப்படுத்துதல் போன்ற துறையின் இதர செயல்பாடுகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாச்சியர்களுக்கும் மற்றும் முதுநிலை திருக்கோயில்களில் பணியாற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர்களுக்கும், செயல் அலுவலர்களுக்கும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

நவீன மயமாகும் காலச் சூழ்நிலைக்கேற்ப பணிகளை விரைவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதற்கேற்றவாறு நிர்வாக நடவடிக்கைகளை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகும். வாக்கி டாக்கி வழங்கும் திட்டம் துறையின் செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பெறும் ஊன்றுகோளாக அமையும். பட்டினபிரவேசம் பல்லாக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள். நாங்கள் சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். விளம்பரங்களுக்காக ஆட்சி செய்யக்கூடிய அரசு அல்ல.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆன்மீகத்திற்கு எதிராக என்றாவது செயல்பட்டுள்ளரா...திருக்கோயில் வளர்ச்சிக்கு பல கோடி ரூபாய் அளித்துள்ளார். ஆன்மீக பக்தர்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை கோட்பாடுகளின்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அரசியலுக்காக சில பிரச்சனைகளை கையில் எடுப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். அயோத்தியா மண்டபம் தொடர்பான நிகழ்வில் நீதிமன்ற உத்தரவின்படி இத்துறை செயல்படும்.

சென்னையில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான திருக்குளங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு படித்துரை சீர்செய்யப்படும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர்கள் சில பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாக புகார்கள் வரபெற்றுள்ளது. அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க திருக்கோயில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சி தரும் வகையில் வெள்ளை நிற வண்ணம் பூசுதல் மற்றும் தேங்காய் நார்களினால் பின்னப்பட்ட தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  

தேவையான இடங்களில் தற்காலிக நிழற் பந்தல் அமைக்கவும், பக்தர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் அமைக்கவும், அவற்றில் மின்விசிறிகள் பொருத்திடவும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் சுகாதாரமான குடிநீர், மோர் மற்றும் எலுமிச்சைபானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் திரு.சுதர்சன், திரு.தனபால், திரு.ஜெயராமன், திரு.இலட்சுமணன் மற்றும் தலைமையிட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர். 

Related Stories: