தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை முதல்வரே நியமிப்பதற்கான அதிகாரம்: பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை முதல்வரே நியமிப்பதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணைவேந்தரை அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 1996ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக ‘அரசு’ என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினாலோ, பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறுவிளைப்பதாக அரசு கருதினால் மூன்று உறுப்பினர்களை நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுள்ளது. முதல்வர் தான் அரசு என்பதால் முதல்வரே துணைவேந்தரை நியமனம் செய்வார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூட்டத்தொடரிலே நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு கொடுப்பதற்கான சட்டமுன்வடிவு ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தற்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்திலும் கவர்னரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சட்டப் பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-பதில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில், விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதில் அளித்து பேசி, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

Related Stories: