திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது:14ம் தேதி வரை நடக்கிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து, 14ம் தேதி வரை நடைபெறும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் மிகவும் சிறப்புமிக்கது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை 5 மணியளவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.

சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக வரும் 14ம்தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு நேரத்தில் சுவாமிக்கு மண்டகபடியும் செலுத்தப்படும். விழாவின் நிறைவாக வரும் 14ம்தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும் அன்று இரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் நடைபெறும் மேலும் அன்று இரவு 10 மணியளவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். சிவாலயங்களில் மன்மத தகனம் நடைபெறும் தனிச்சிறப்பு அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: