பஸ் எங்கு வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ‘சென்னை பஸ்’ ஆப் அறிமுகம்: போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு

சென்னை: நுண்ணறிவு போக்குவரத்து  மேலாண்மை அமைப்பில் (ஐடிஎஸ்) மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்கள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிய ஏதுவாக, சென்னை பஸ் என்ற (ஆப்) செயலியை நேற்று தலைமைச் செயலக அலுவலகத்தில், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.  

இந்த ‘சென்னை பஸ்’ செயலியானது, அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும்படி,  பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை  கைபேசியில் தெரியும்படி, தானியங்கி வாகன இருப்பிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமாக உள்ள 3,454 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களுக்கு 602 வழித்தடங்களில், 6,026 பேருந்து நிறுத்தங்களில் நின்றும் செல்லும் வகையில், 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

சென்னையில் தினமும் 25 லட்சம் பயணிகள் உட்பட, பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகைத் தரும் பயணிகளும் இச்செயலியினை பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எங்கு வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து அதற்கேற்ப பயணத்ைத திட்டமிடலாம். இந்த செயலியை பயன்படுத்துவதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்க்கு சென்று, சென்னை பஸ் ஆப்பினை பதிவிறக்கம் செய்து தங்களது செல்போனில் டவுன்லோடு செய்ய வேண்டும். தங்களது செல்போனில் இருப்பிடத்தை ஆன் செய்ய வேண்டும். பின்னர், சென்னை பஸ் லோகோவை திறக்க வேண்டும். அப்போது தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தங்களது செயலியில் தெரியும்.

தாங்கள் எந்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டுமோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது அந்த பேருந்து நிறுத்ததிற்கு வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளும், வரிசைப்படி, தட எண், பேருந்து பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம் (நிமிடங்களில்) தங்களின் செல்லலிடை பேசியில் தெரியவரும். தாங்கள் செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து வரும் இடம் ஆகியவை செல்லிடை பேசியில் வரைப்படத்துடன் தெரியவரும்.

Related Stories: