காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எங்கு சென்று புகார் அளிப்பது?.. பிரியங்கா காந்தி கேள்வி

லலித்பூர்: உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் பாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, அதேபகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் போபாலுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் பாலி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர், சிறுமியை தனியாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் கண்டனத்தை பதிவு செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி; சட்டம் ஒழுங்கு புல்டோசர் வாகனத்தை போல் நசுக்கப்படுகிறது. காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் எங்கு சென்று புகார் அளிப்பது என கேள்வி எழுப்பியுள்ள அவர்,

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை பற்றி என்றாவது உத்தரப்பிரதேச அரசு சிந்தித்துள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் இருக்க பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: