நீலகிரியில் கோடை விழா 7ம் தேதி துவக்கம் 20ம் தேதி முதல் 4 நாட்கள் மலர் கண்காட்சி

ஊட்டி: நீலகிரியில் கோடை விழா வரும் 7ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. 19ம் தேதி படகு போட்டி நடக்கிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விழா வரும் 7ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. கோடை விழாவின் ஒரு பகுதியாக வரும் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை அரங்கில் வனத்துறை மூலம் புகைப்பட கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இதில், இயற்கை சார்ந்த புகைப்படங்கள், வன விலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களின் வண்ண மிகு புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன.

13ம் தேதி துவங்கி 3 நாட்கள் கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி நடக்கிறது. 14ம் தேதி துவங்கி இரு நாட்கள் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை 4 நாட்கள் நடத்தப்படும். 28ம் தேதி துவங்கி இரு நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை படகு இல்லத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள தரைத்தளத்தில் பொருட்காட்சி நடைபெறும். கோடை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 19ம் தேதி ஊட்டி ஏரியில் படகு போட்டி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: