எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

பொன்னேரி: காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் எண்ணூர் நிலக்கரி முனையம் இயங்கி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு வந்து இங்கு சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் தனியார் அனல் மின் நிலையங்கள், செங்கல் தொழிற்சாலைகள், இரும்பு உருக்காலைகள், பீர்தொழிற்சாலைகள், பால் உற்பத்தி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகளுக்கு இங்கிருந்து நிலக்கரி கொண்டு செல்லும் பணியில் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.

இதனிடையே, லாரி வாடகையை 30%  உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செட்டிநாடு நிலக்கரி முனையத்தில் இருந்து லாரிகளை இயக்க மறுத்து நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே வாடகையை தற்போதும் வழங்குவதாகவும், இதனால் டீசல் விலை, சுங்க கட்டண உயர்வு, வாகன உதிரி பாகங்கள் விலை ஏற்றம் ஆகியவற்றால் தங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக 30% வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் தொழிற்சாலைகள் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் 2வது நாளாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது. டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் விலை உயர்வு காரணமாக லாரிகளை இயக்கும்போது பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இனிமேலும் இழப்பை சந்தித்து வாகனங்களை இயக்க முடியாது என்றும் லாரி வாடகையை 30% உயர்த்தி வழங்கினால் மட்டுமே வேலை நிறுத்தம் கைவிடப்படும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: