உக்ரைன் போரை கண்டித்து போராடிய புடினுக்கு எதிரான 15,000 ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சம்; ‘விசா’ எளிதாக கிடைப்பதால் படையெடுப்பு

மாஸ்கோ: உக்ரைன் போரை கண்டித்து போராடியவர்களில் 15 ஆயிரம் ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு எளிதாக விசா கிடைப்பதால் இலங்கைக்கு படையெடுத்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேலான நிலையில், ரஷ்ய அதிபருக்கு எதிராக அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன. அவர்கள், உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது ரஷ்யப் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான கருத்துள்ளவர்கள், தங்களது உயிருக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை மூன்று லட்சம் பேர் ரஷ்யாவில் இருந்து பல நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஜார்ஜியா, துருக்கி, ஆர்மீனியா போன்ற நாடுகளில் அதிகளவில் ரஷ்யர்கள் சென்றுள்ளனர். இவர்கள் முறையான விசா மூலம் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஷ்யாவை சேர்ந்த ஒலெக் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ரஷ்யாவை விட்டு வெளியேறுவதில் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றோம். விமான டிக்கெட்டுகள் எளிதாக கிடைப்பதில்லை. சிறப்பு விசா அவசியமில்லாத நாடுகளை தேடிப் பார்த்தோம். அவ்வாறு சிறப்பு விசா தேவையில்லாத நாடுகளாக சில நாடுகள் இருந்தாலும் கூட, அந்த நாடுகளில் விமான டிக்கெட்டுகளின் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. டிக்கெட்டுகளுக்காக பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது.

இறுதியாக இலங்கைக்கு சென்றால், டிக்கெட் மிகக் குறைவு என்பதாலும், விண்ணப்பித்த சில நாட்களில் விசா கிடைத்துவிடுகிறது என்பதால், ரஷ்யாவில் இருந்து இலங்கை செல்கிறோம். நாங்கள் ஆசிய நாடுகளுக்கு இதுவரை சென்றதில்லை. தற்போது முதன் முறையாக இலங்கைக்கு செல்கிறோம். இந்த நாடு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, அரசியல் காரணங்களுக்காக இதுவரை 3,00,000 ரஷ்யர்கள்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். தற்போது சுமார் 15,000 ரஷ்யர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உக்ரைன் மீதான போருக்கு எதிரானவர்கள். வேறு நாட்டில் சென்று தஞ்சமடைந்தாலும், அங்கு எங்களுக்கு என்ன வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது தெரியவில்லை’ என்றனர்.

Related Stories: