நாளை ரமலான் திருநாள் : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இஸ்லாமியர்களின் ரமலான் திருநாள் நாளை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

ஆர்.என்.ரவி (கவர்னர்): முகமது நபியின் அன்புணர்வு, அறிவுரை குறித்த போதனைகள், எக்காலத்தும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீக பாதையை கடைப்பிடிக்க உறுதி எடுத்து கொள்

வோம்.

ஓ.பிஎஸ், இபிஎஸ் (அதிமுக): மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த இனிய திருநாளில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): அரசமைப்பு சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆபத்து ஏற்படுமேயானால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள். இந்த திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, ஏழைகளுக்கு பெருநாள் கொடை வழங்கி அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ராமதாஸ் (பாமக): அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

வைகோ (மதிமுக): இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் 30 நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்கு களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள். இந்த நன்னாளில், சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஜி.ேக.வாசன் (தமாகா): எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துதல், இல்லாதவர்களுக்கு அளித்து உதவும் மனம், அனைவரையும் சகோதர, சகோதரிகளாக பாவிக்கும் குணம் இவை இஸ்லாமியர்களின் தனிச் சிறப்பு. உள்ள தூய்மையோடு நோம்பிருந்து இறைவழிபாடு நடத்தும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள்.

டிடிவி.தினகரன் (அமமுக): சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும்.

அன்புமணி (பாமக): மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்று கொள்வோம்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தில் நோன்பை அனுசரிக்கிறார்கள். நோன்பிற்கான ஆன்மீக வெகுமதி ரமலான் மாதத்தில் பெருக்கப்படும் என்று நம்பப்படுகிறது. உலக சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் கடைபிடித்திட அனைவரும் பாடுபட இந்த திருநாளில் உறுதியேற்றிட வேண்டும்.

சரத்குமார் (சமக): இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், வாழ்க்கை தரம் உயர்வதற்கும், சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் சமக உறுதுணையாக செயல்பட்டு வரும். உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்.

நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ): புண்ணியம் பூத்து குலுங்கும் புனித மிகு ரமலானில் 30 நாட்கள் நோன்பிருந்து, முறையாக மறையோதி இறையோனை வணங்கி, இறையருளை பெற்று ஈதுல் ஃபித்ர் எனும்  ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இதேபோன்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்பி, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories: