முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கிக்கொள்ளப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்.பி.வேலுமணியிடம் வழங்குவோம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: