நடிகர் விவேக் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயர்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்த விவேக், தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, இளைஞர்கள்  அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி வந்தார். தமிழ்  திரையுலகில் சின்னக் கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த  விவேக், கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி திடீரென  மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மற்றும் குடும்பத்தினர் நடிகர் விவேக் வசித்த பகுதியில் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் நடிகர் விவேக் வாழ்ந்த அவரது வீடு இருக்கும் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பிரதான சாலையை, நடிகர் விவேக் பெயருக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த பத்ம ஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: