10.5% இட ஒதுக்கீட்டை முதல்வர் நிறைவேற்றி கொடுப்பார்: அன்புமணி எம்பி நம்பிக்கை

விழுப்புரம்:  விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, முன்னாள் அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக அன்புமணி எம்பி கலந்துகொண்டு பேசுகையில், வருகிற 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி நமது கட்சியில் மறுசீரமைப்பு நடந்து வருகிறது. நமக்குள் சில மாற்றங்களை செய்து வருகிறோம்.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். சுழற்சி முறையில் எல்லோருக்கும் பொறுப்பு வரும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமையும். நாம் போராடி பெற்ற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 காரணங்களை சொல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

பின்னர் அவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது 7 காரணங்களில் 6 காரணங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுசம்பந்தமாக நாங்கள் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளோம். இந்த கல்வியாண்டிற்குள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் சட்டம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றி 10.5 சதவீத  இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவரும் செய்வதாக கூறியிருக்கிறார். நிச்சயம் செய்வார் என்று நம்புகிறோம், என்றார்.

ஆளுநர் ஈகோ பார்க்க கூடாது

பொதுக்குழு கூட்டத்துக்கு பின் அன்புமணி எம்பி அளித்த பேட்டியில், ஆளுநரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் ரயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும். இவர்களுக்குள் பிரச்னை வரக்கூடாது. யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கக் கூடாது. அதே நேரத்தில் ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். நடுநிலையுடன் செயல்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசை ஒன்றிய அரசு சொல்வது ஏற்புடையது அல்ல. ஏனெனில் ஒன்றிய அரசு தான் பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கிறது, என்றார்.

Related Stories: