பொதுப்பணித்துறைக்கு தரக்கட்டுப்பாட்டு கோட்டம் உருவாக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: பொதுப்பணித் துறைக்கு தரக்கட்டுபாட்டு கோட்டம் புதிதாக உருவாக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம், நீர்வளம் ஆகிய 2 பிரிவுகள் உள்ளது. இதில், கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு துறைகளின் அரசு கட்டிடங்களை புனரமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளும்,  நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை, கதவணை அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் நீர்பாசனத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை நிர்வாகம்2 ஆக பிரிக்கப்பட்டன. இதில், நீர்வளத் துறையில் மட்டுமே தரக்கட்டுப்பாட்டு கோட்டம் இருந்தது. இந்த கோட்டத்தின் மூலமே பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள துறையின் மூலம் நடைபெறும் பணிகளின் ஆய்வு நடந்து வந்தது.

இந்நிலையில் தரக்கட்டுப்பாட்டு கோட்டத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி ஏற்கனவே, சென்னை, கோவை மதுரை, சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய ஏழு கோட்டங்கள் இருந்தது. இதில் தற்போது நீர்வளத்துறை சென்னை, மதுரை, திருச்சி,கோவை ஆகிய நான்கு கோட்டங்களும், பொதுப்பணித் துறைக்கு சேலம் விழுப்புரம் திருநெல்வேலி ஆகிய கோட்டங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோட்டங்கள் கீழ் இருந்த உப கோட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உப கோட்டங்கள் சார்பில் பொது பணி மற்றும் நீர்வளத் துறையில் நடைபெறும் பணிகளை தர ஆய்வு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: