டீ, டிபன் விலை மேலும் உயரும்; வர்த்தக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு.! சென்னையில் ரூ.2,355 ஆக நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வர்த்தக சிலிண்டர் ரூ.2,355.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ, டிபன் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இந்தவகையில் நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கடந்த மாத விலையிலேயே நீடிக்கிறது. டெல்லியில் ரூ.949.50, கொல்கத்தாவில் ரூ.976, மும்பையில் ரூ.949.50, சென்னையில் ரூ.965.50, சேலத்தில் ரூ.983.50 ஆக உள்ளது. ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிக்கப்பட்டது. இவ்விலையேற்றம் நகரங்களுக்கிடையே மாறுபட்டது. சென்னையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த மாத (ஏப்ரல்) விலையான ரூ.2,253ல் இருந்து ரூ.102.50 அதிகரித்து ரூ.2,355.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.2,359.50ல் இருந்து ரூ.102 அதிகரித்து ரூ.2,461.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநேரத்தில் ரூ.100க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளதால், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை மற்றும் டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது எரிபொருளான வர்த்தக சிலிண்டர் விலையும் அதிகரித்திருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: