தேனியில் இன்று பயனாளிகளுக்கு ரூ.300 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தேனி: தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆயிரக்கணக்கானோருக்கு ரூ.300 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவடைந்த பல திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். தேனியில் இன்று நடந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு மதுரை வந்தார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்எல்ஏக்கள் தளபதி, புதூர் பூமிநாதன், ஐ.பி.செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் பொன் முத்துராமலிங்கம், மணிமாறன், குழந்தைவேலு, வேலுச்சாமி உட்பட திமுகவினர் ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர்.

விமான ஓடுபாதையில் இருந்து கார் மூலம் சிறப்பு பாதையில் வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் முதல்வர் தேனி சென்றார். வழி நெடுக முதல்வருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவர் தேனி வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினார். தேனி அன்னஞ்சி பிரிவு பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே இன்று காலை 10 மணிக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பல கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு ரூ.300 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். தேனியில் விழா நடந்த பகுதியில் தென்மண்டல போலீஸ் ஐஜி அஸ்ராகார்க், டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, தேனி எஸ்பி பிரவீன்உமேஷ் டோங்கரே உட்பட 7 எஸ்பிக்கள் தலைமையில் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார். அங்கு அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள அரசு விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: