பராமரிப்பு பணி காரணமாக தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் மூடல்

ஊட்டி : பராமரிப்பு பணி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மூடப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் கோடை சீசன் போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சிக்காக 6 மாதங்களுக்கு முன்னதாகவே பூங்காவை தயார் செய்யும் பணி  மேற்கொள்ளப்படும். குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் நடவு பணிகள் துவக்கி படிப்படியாக நாற்று நடவு பணிகள் துவக்கப்படும்.

பின், பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவை பராமரிக்கப்படும்.

இது தவிர, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்ளப்படும். கடந்த வாரம் பூங்காவில் உள்ள பெரிய கண்ணாடி மாளிகை மூடப்பட்டு பராமரிப்பு பணிகள், தொட்டிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், ஒரு வார காலம் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. தற்போது, பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் புதிய மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பெரணி இல்லத்தில் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், கண்ணாடி மாளிகையில் இருந்த அனைத்து பெரணி தொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி மாளிகையில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், பெரணி இல்லத்திற்கு தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரணி செடிகளை புதிய தொட்டிகளில் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இந்த வாரம் முழுக்க நடைபெறும். ஒரு வாரத்திற்கு பின் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: