எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 17 கிலோ கஞ்சா பறிமுதல்-காட்பாடி ரயில்வே போலீசார் நடவடிக்கை

வேலூர் : தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கஞ்சா ஆபரேஷன் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளூர் போலீசார், தமிழக ரயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என மாநிலம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்கின்றனர்.

மேலும் இவற்றை கடத்தி விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர்- கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூருக்கு செல்லும் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலில் காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் சத்தியமூர்த்தி, முத்துவேல், ஜோதீஸ்வரன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது, டி2 கோச்சில் லக்கேஜ் வைக்கும் ரேக்கின் அருகே கேட்பாரற்று கிடந்த 4 பைகளை சோதனை செய்தனர். இவற்றில் 32 பண்டல்களில் 17 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தியது யார்? எங்கிருந்து கடத்தி வருகின்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: