அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் விடுதலை: பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் 2013ல் கலைஞர் நற்பணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. திமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் இளம்பரிதி பேசினார். ஜெயலலிதா, லத்திகாசரண் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இளம்பரிதி, தலைமை கழக பேச்சாளர் பிரபாகரன் ஆகியோர் மீது பொதுமக்களிடையே அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை 8வத பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இளம்பரிதி சார்பில் ஜி.ஜெய்சிவராமராஜ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் புகார்தாரர் உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து குற்றம்சாட்டப்பட்ட இளம்பரிதி, பிரபாகரன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிடப்படுகிறது என்று நேற்று தீர்ப்பளித்தது.

Related Stories: