செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதார விலையில் உளுந்து பயிறு கொள்முதல்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து பயிறு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்தார்.   தமிழகத்தில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நடப்பு ஆண்டில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், நியாயமான சராசரி தரத்துக்கு உட்பட்ட உளுந்து பயிறு கிலோ ஒன்றுக்கு ₹63 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதன்படி, மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடப்பு பருவத்தில் 150 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் மே 15ம் தேதிவரை மட்டுமே செயல்படுத்தப்படும். இதன்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.

  விளைபொருளுக்கான தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம் (செங்கல்பட்டு), செயலாளர் (பொறுப்பு), காஞ்சிபுரம் விற்பனைக்குழு, மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகவும். இதன்மூலம்ட விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க தமிழக அரசின் முயற்சியில் விவசாயிகள் முழுமையான பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Related Stories: