6 - 12 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்..!!

டெல்லி: இந்தியாவில் 6 - 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது, 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் எடுத்துள்ளன. கொரோனா பாதிப்பு சிறுவர்களையும் அதிக அளவு பாதிக்கக்கூடும் என்பதால் கொரோனா தடுப்பூசி  செலுத்தப்படவுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தது. ஆய்வு பணி முடிவடைந்ததையடுத்து பாரத் பயோடெக் நிறுவனம்  கோவாக்சின் தடுப்பூசி 6 வயது முதல் 12 வயதுடைய சிறுவர், சிறுமியர்களுக்கு செலுத்த இந்திய மருத்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுமதி கோரி  விண்ணப்பித்திருந்தது.

இந்தநிலையில் மருத்துவ நிபுரணர்கள் ஆய்வுக்கு பிறகு தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories: