கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலனை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சட்டப்பேரவையில் ேகள்வி நேரத்தின் போது திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர் ஈஸ்வரன்(கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசுகையில், தமிழகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மினி பேருந்துகள் இயக்கம் குறித்து, மினி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை முடிவுற்ற பின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் போக்குவரத்து துறையில் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கோஆப்டெக்ஸ் விற்பனையை ‘டபுள்’ ஆக்கி வருகிறோம் -அமைச்சர் ஆர்.காந்தி: சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி(திமுக) எழுப்பிய கேள்விக்கு பேசுகையில், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற  கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதன் விற்பனைகளைப் பெருக்கிடவும், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை உருவாக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில்,” கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மொத்தம் 154 உள்ளன. அந்த 154 கடைகளில் 49 கடைகள் வேறு மாநிலங்களில் உள்ளன. மீதம் உள்ள 105 கடைகள் தமிழ்நாட்டில் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு ஒவ்வொரு கடையாக லேட்டஸ்டாக எடுத்து அதன் விற்பனையை டபுள் ஆக்கி கொண்டு வருகிறோம். எனவே, உறுப்பினர்  கேட்டக் கேள்விக்கு திருப்பத்தூரில் முடிந்தால் அங்கு ஒரு கட்டிடத்தினை எடுத்து விற்பனை நிலையத்தினை செயல்படுத்த ஆவனம் செய்யப்படும்” என்றார்.

மண்ணை பாழ்படுத்தும் அபாயகரமான திட்டங்களை நிராகரித்தவர் முதல்வர் -அமைச்சர் மெய்யநாதன்: சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்து பேசியதாவது: தமிழகம் கடந்த காலங்களில் போராட்ட களமாக இருந்தது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களுக்காக பல போராட்டம் நடந்தது.  21.06.2021 அன்று ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது.

ஆரம்ப நிலையிலே அந்த விண்ணப்பங்களை நிராகரித்தவர் முதல்வர். இந்த மண்ணை பாழ்ப்படுத்தும் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிப்பதற்கு வாய்ப்பே வழங்காமல் உள்ளார்.டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை, கண்ணை இமை பாதுகாப்பது போல பாதுகாப்பேன் என்று சொன்னவர் நமது முதல்வர்.  இயற்கைக்கு நாம் செய்யக்கூடிய முக்கியமான பணிகள் என்றால் நாம் அனைவரும் மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த துறை மூலம் ஆயிரம் மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் என்றார்.

Related Stories: