தமிழ்நாடு பாணியில் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் விமான நிலைய வருவாயில் உரிய பங்கு தர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

புதுடெல்லி: தனியார் மயமாக்கும் விமான நிலைய வருவாயில் இருந்து மாநிலத்துக்கு பங்கு வழங்க வேண்டும் என்று தமிழகத்தை தொடர்ந்து சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஒன்றிய அரசுக்கு சொந்தமான 25 விமான நிலையங்களை தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தனியார்மயமாக்க கடந்தாண்டு செப்டம்பரில் இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சட்டீஸ்கரில் உள்ள ராய்பூர், ஜார்கண்ட்டில் உள்ள ராஞ்சி ஜோத்பூர் உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் தமிழக அரசு அனுப்பிய கொள்கை கடிதத்தில், `விமான நிலையங்களை 3வது நபர் வசம் ஒப்படைப்பதற்கு முன்பாக, மாநில அரசு வழங்கிய நிலத்துக்கான மதிப்பு பங்குகளாக மாற்றப்பட்டு, விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசின் பங்காக வழங்க வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தை ஒன்றிய அரசு தனியார் மயமாக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் வருவாயில் மாநிலத்துக்கு பங்களிக்க வேண்டும் என்று சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. சட்டீஸ்கர் வர்த்தகத் துறை அமைச்சர் சிங்தியோ, ``இதில் நிலம் மாநில அரசின் மூலதனமாகும். ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஒரு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் போது, அதிலும் குறிப்பாக வருவாய் வரும் திட்டமாக இருக்கும் பட்சத்தில், நிலத்தை முதலீடாக கருதி அந்த வருவாயில் மாநிலத்துக்கு பங்கு கொடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

அதே போல, ஜார்கண்ட் நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஓரான், ``தமிழக அரசின் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. நிலம், தண்ணீர் ஆகியவற்றை மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், ஒன்றிய அரசு அதனை தனியாருக்கு கொடுக்கும் பட்சத்தில், அதில் இருந்து கிடைக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு பங்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக, ஜார்கண்ட்டிற்கு என்று இல்லாமல், அனைத்து மாநிலங்களுக்குமான கொள்கையை ஒன்றிய அரசு வரையறுக்க வேண்டும்,’’ என்று கூறினார்.

Related Stories: