புதுச்சேரி பல்கலையில் அரவிந்தர் 150வது பிறந்தநாள்விழா உலகின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

புதுச்சேரி:  உலகில் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளதாக அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை, கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் காலை 11 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு சென்று பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

11.20 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம் சென்று அரவிந்தர், அன்னை சமாதியில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காலாப்பட்டு பல்கலைகழகத்தில் நடந்த அரவிந்தரின் 150 வது பிறந்ததநாள் விழாவில் பங்கேற்றார். மதியம் 2.30 மணியளவில் கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், ஈசிஆரில் புதிய பேருந்து முனையம் கட்டுமானம் செய்தல் உட்பட ₹363 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காவலர் பணிக்கு தேர்வான 390 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். மாலை 4.15 மணிக்கு சித்தானந்தா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 5.05 மணிக்கு கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைந்த அவர், ஹெலிகாப்டரில் சென்னை சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி சென்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் அமித்ஷா பேசுகையில், உலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி இந்தியாவிடம் உள்ளது என அரவிந்தர் நம்பினார். நமது கலாசாரத்திலும், வேதத்திலும் நாட்டின் எல்லைகள் பற்றி குறிப்பிடவில்லை. நாம் உலக நலனுக்காகவும், விண்வெளி நலனுக்காகவும் உழைப்பவர்கள். காலம், காலமாக புகழை எதிர்பார்க்காமல் நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என நாட்டுக்கு இலக்கியம் தந்தவர் அரவிந்தர்.

அவரின் கருத்துக்கள் நாட்டின் விலைமதிப்பற்ற பாரம்பரியம். பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டில் அரவிந்தரின் கனவுகளை நனவாக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

நரேந்திர மோடியின் புதிய கல்விக் கொள்கையை கவனமாகப் படித்தால் எல்லா இடங்களிலும் அரவிந்தரின் கல்விக் கொள்கையில் உள்ள கருத்துக்கள் தெரியும்.

நாம் அடிமைகளாக இருந்த காலம் இருந்தது, ஆனால் நமது சிந்தனை மற்றும் பண்டைய கலாசாரம் ஒருபோதும் சிறியதாக சிந்திக்க அனுமதிக்காது. ஸ்வராஜ் என்றால் அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, ஸ்வராஜ் என்பது இந்தியாவின்  பூர்வீக கொள்கைகள், கலாசாரம் மற்றும் அதன் கருத்துகளை முன்னெடுத்து  செல்வதை குறிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசுகையில், ஒன்றிய அரசு வழிகாட்டுதலோடு புதுச்சேரி மாடல் என்ற புதுமையான வளர்ச்சி திட்டத்தை புதுவை பார்க்க இருக்கிறது. அமித்ஷாவின் வருகை புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய மைல் கல். இன்று முதல் புதுச்சேரியின் வளர்ச்சி வேகமெடுக்கும். யாரெல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் என்றார். முதல்வர் ரங்கசாமி பேசுகையில் புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புவதாக கூறினார்.

Related Stories: