குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: குன்றதூர் முருகன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, சில மாதங்களுக்கு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயிலை சுற்றிலும் 5 இடங்களில் தண்ணீர் தொட்டிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்களுக்காக தாம்பரம், பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல் ஆகிய பணிமனைகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் விழாக்குழு தலைவர் செந்தாமரை கண்ணன், உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி அமுதா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: