வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:  வடமாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் விவரங்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், அந்தத் தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியும் செலுத்தப்படும். தமிழகத்தில் தினசரி கொரானா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 வரை இறங்கி வந்தது. கொேரானா முடிந்து விட்டது என நினைத்த நிலையில், தற்போது 39 வரை அதிகரித்துள்ளது.

மே மாதம் 8-ம் தேதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் 1 லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கோடி நபர்கள் எந்தப் பகுதியில் அடர்த்தியாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசி முகாமினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: