ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளது; விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவோம்!: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்..!!

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி நடை பயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிஐக்கு இந்த விசாரணை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிசந்திரன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீலிடப்பட்ட கவரில் ரகசிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் வாதிட்ட வழக்கறிஞர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது.

சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த 6 போலீஸார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தார். 43 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமின்றி வழக்கு தொடர்பாக யாரேனும் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு சன்மானமாக 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories: