திருவண்ணாமலை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை கலெக்டர் பா.முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கால் ஊனமுற்றோர்களுக்கு 50 மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கை ஊனமுற்றோர்களுக்கு 100 மீ ஓட்டப்பந்தயம், குள்ளமானோர்களுக்கு 50 மீ ஓட்டம், இரு கால்களும் ஊனமுற்றோர்களுக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டி மற்றும்  பார்வையற்றோர்களுக்கு 50 மீ ஓட்டம், வாலிபால், எறிபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்பி பவன்குமார், டிஆர்ஓ பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்(பொறுப்பு)பாலாஜி, மாவட்ட விளையாட்டு நலஅலுவலர் நான்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: