உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு; மே 8ல் தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், இந்தியா மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் பலர் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். வடமாநிலங்களில் இருந்து தொழில்புரிய வந்தவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்றார். மேலும் வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.  தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1.46 கோடி பேர் சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: