நெல்லையப்பர் கோயிலில் 500 பேருக்கு அன்னதானம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசும்போது, ‘‘திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். அடிப்படை வசதி செய்து தர வேண்டும். முழுநேர அன்னதான வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: நெல்லையப்பர் கோயிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 1000 பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டுக்கு 9 உற்சவ நிகழ்ச்சிகள் அங்கு நடக்கிறது. அதுபோன்ற காலங்களில், 500 பக்தர்களுக்கு குறைவில்லாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது, கோயிலில் 9 பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு மூத்த குடிமக்களுக்கு உண்டு, உறைவிட கட்டிடம் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: