சத்தியமங்கலம் அருகே தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோெயிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் கம்பம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து கம்பம் வெட்டிக் கொண்டு வரப்பட்டு தண்டு மாரியம்மன் கோயில் முன்பு பிரம்மாண்ட கம்பம் நடப்பட்டது. கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில், கம்பத்தைச் சுற்றி தினமும் இரவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பவானி ஆற்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாட்டனர். இந்நிலையில், இன்று காலை கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்தில் பூசாரி கோகுல் சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினார். இதையடுத்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: