பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் விடுதலையாகிறார் சிவசங்கர் பாபா: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலா் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் சிவசங்கா் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் முன்னதாக உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சிவசங்கர் பாபா மீதுள்ள 8 வழக்குகளில் 7 வழக்குகளுக்கு ஜாமீன் வாங்கியிருந்த நிலையில் கடைசி வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி,  சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்க முயற்சித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7 வழக்குகளில் சிவகங்கர் பாபா ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ள நிலையில் தற்போது 8 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால்  சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆதாரங்களை கலைத்து சாட்சியங்களை மிரட்டுவார், தலைமறைவாகி விடுவார். எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி சிவசங்கர் பாபா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: