பெண் எஸ்பி மீதான பாலியல் விவகாரம் சஸ்பெண்டை நீக்க கோரிய எஸ்பியின் மனு மீது சட்டப்படி பரிசீலனை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கடந்த ஆண்டு முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியிடம் முன்னாள் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இதையடுத்து, அவரும் புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்.பியை சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்த பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்தநிலையில், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசிடம் கொடுத்த மனு மீது நவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. வழக்கு தொடர்ந்திருந்திருந்தார். அதேசமயம், விசாரணை குழு உரிய விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சஸ்பெண்ட் சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்கும் குழு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து 6 வாரங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.  குழு அமைத்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: