மின்சார செலவு அதிகமாக வருவதால் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதில்லை: ஆர்.கே.நகர் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஆர்.கே.நகர் தொகுதி ஜே.ஜே.எபினேசர் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட வட்டம் 36, 39, 40, 41,42, 43 மற்றும் 47ல் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அரசு முன்வருமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘பழைய தெருவிளக்கு மின் கம்பங்களை மாற்றி புதிய 7 மீட்டர் உயர மின்கம்பம் அமைக்கப்படும். 1584 மீட்டர் பழுதடைந்த 2 கோர் கேபிள்கள் மாற்றி புதிய கேபிள்கள் அமைக்கும் பணி மற்றும் 188 எண்ணிக்கையில் பழுதடைந்த 4 கோர்பியூஸ் பாக்ஸ்களை மாற்றி புதியதாக பியூஸ்பாக்ஸ்களை மின்கம்பத்தில் பொருத்தவும், 528 எண்ணிக்கையில் தெருவிளக்கு மின் கம்பங்களின் சேதமடைந்த முகட்டுசுவர்களை சீரமைக்கவும் மதிப்பீட்டிற்கான அனுமதி பெற்று பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்’.

ஜே.ஜே.எபினேசர்: வார்டு எண் 43ல் அமைந்துள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் இடுகாட்டு பகுதியில், அச்சமுதாய மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ள உயர்மட்ட மின்கோபுர விளக்கினை அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: தமிழகத்தில் ஆங்காங்கே உயர் மின்கோபுர விளக்குகளை அமைப்பதற்கு தடையிருக்கிறது. அதிகமான எண்ணிக்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அமைக்கின்ற காரணத்தால் மின்சார செலவு அதிகமாக வருகிறது என்று நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உறுப்பினர் கேட்டு கொண்டதற்கு இணங்க இஸ்லாமிய மக்கள் பயன்பெறும் வகையில் உயர் மின் கோபுரம் அமைக்க நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். மேலும் பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள மின் விளக்குகளை மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: