கட்டையில் எரித்தால் காற்று மாசு எல்லா மாநிலங்களிலும் மின் தகன மேடை வசதி: பசுமை தீர்ப்பாயம் அறிவுரை

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தின் இந்திரபுரத்தில் இயங்கும் தகன கூடத்தில், தகனம் செய்யும் போது தூசி மற்றும் உமிழ்வுகள் வெளியாகி கடும் காற்று மாசுபாடு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மரக்கட்டைகள் மூலமாக தகனம் செய்யும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, தீ மூட்டி தகனம் செய்வது புனிதமானது. ஆனாலும், ஒரு தகனத்தில் 350-450 கிலோ மரக்கட்டைகள் திறந்தவெளியில் எரிக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் எந்தவொரு மத நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

அதே சமயம், மரக்கட்டைகளால் தகனம் செய்யும் போது ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தகன முறைகளுக்கு ஊக்கமளிக்கவும் வேண்டும். எனவே, இதற்கு மாற்றாக மின்சாரம் அல்லது பிஎன்ஜி எரிவாயு தகனமேடையை அமைக்கலாம். இதற்கான சாத்தியக்கூறுகளை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆராய வேண்டுமென வலியுறுத்துகிறோம். மரக்கட்டைகள் மூலம் தகனம் செய்வதைக் காட்டிலும் மின்சாரம் மூலம் தகனம் செய்வது செலவையும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.

Related Stories: