சிபிசிஎல் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

சென்னை: சிபிசிஎல் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மணலியில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், காஸ் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வரும் தலைமுறைக்கு  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எரிபொருளை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடத்தில் பதிக்கவும்,  எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்  சிபிசிஎல் உட்பட அனைத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இணைந்து சாக்சம் 22 என்ற திட்டத்தை   உருவாக்கி உள்ளது.

அந்த வகையில், எரிபொருள் சிக்கனத்தால் ஏற்படும் பயன்பாடுகளை குறித்து  விளக்கும் வகையில் சைக்கிள் பேரணி, மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்த சிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக மணலி சிபிசிஎல் நிறுவனம் சார்பில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி மாணவ, மாணவியர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மணலி சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று காலை நடைபெற்றது.

 நிறுவன மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய கூடைப்பந்து அணி முன்னாள் தலைவர் அனிதா, பூப்பந்து விளையாட்டு வீரர் வேலன், சின்னத்திரை நடிகர்கள் சுஜிதா, காவியா, குமரன் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிசிஎல் நிறுவன ஆலைப் பணி இயக்குனர் கிருஷ்ணன் மற்றும்  உயர் அதிகாரிகள் எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் பற்றி உரையாற்றினார்.

Related Stories: