தமிழகம் முழுவதும் ஒரு கால பூஜை நடைபெறும் 12,959 கோயில்களின் மின் கட்டணத்தை அரசு செலுத்தும்: அறநிலையத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 34,062 கோயில்களின் வருமானம் 10,000க்கும் குறைவாகவே உள்ளது. இந்தக் கோயில்களில் பூஜை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு கால பூஜை திட்டம், தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நிதி வசதியுள்ள கோயில்களின் உபரி நிதி, கோயில் மற்றும் அறப்பணி நிதி, ஆலய மேம்பாட்டு நிதி போன்ற நிதிகளில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சம் கோயில் பெயரில், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து, குறிப்பிட்ட கோயிலின் ‘ஒரு கால பூஜைதிட்டம்’ செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 12,959 கோயில்கள் பயனடைகின்றன. இந்தக் கோயில்களில் தற்போது ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இக்கோயில்களில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக  கோயில் பூசாரிகள் நலவாரியம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்று அந்தக் கோயில்களில் அறநிலையத்துறை கட்டணம் செலுத்த முன் வந்துள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் 12,959 கோயில்களில் ஆறு மாத மின் கட்டண விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அதில் கோயில் பெயர், ஆறுமாத கட்டண விவரம், சராசரி மின் கட்டண விவரங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: