டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்தனர். அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கிடையே, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ  நாளாக’ கொண்டாடப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு உறுதிமொழி குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமத்துவ நாள் உறுதி மொழி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் சென்றார்.

அங்கு அவரது தலைமையில் அரசு அதிகாரிகள் முதன் முறையாக சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘‘சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்’’ என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: