தமிழகத்திலேயே முதல் முறையாக கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 30 குடும்பத்துக்கு செங்கல்சூளை ஏற்பாடு: தமிழக அரசு நடவடிக்கை

திருத்தணி: கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் செங்கல்சூளை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில், கொத்தடிமைகளாக இருந்த இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் மீட்கப்பட்டனர். இதன்பின்னர் இவர்கள் வீடுகட்டிக்கொள்ள இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், 5 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கப்பட்டு வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல்சூளை அமைத்தனர். இதில், 30 குடும்பங்களை சேர்ந்த 300 பேரை கொண்டு சூளை பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செங்கல்சூளை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு செங்கல் சூளை பணிகளை துவக்கிவைத்தார். இதன்பின்னர் செங்கல் சூளைக்கு தேவையான மண் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.  செங்கல் சூளை பணிகள் முடிந்ததும் செங்கற்களை விற்று அதில் வரும் வருமானத்தை கொண்டு அடுத்த கட்ட மூலப் பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் தொண்டு நிறுவனம் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.50,000 மதிப்பீட்டில் வெட்டு இயந்திரங்கள் வாங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குனர்கள் ஜெயக்குமார், மல்லிகா (மகளிர் திட்டம்), ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி செயற் பொறியாளர் ராஜவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஜோதி, பொறியாளர் ஞானசேகரன், அரசு தொடர்பு மேலாளர் ஜெகன், வீரகநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் காதர் பாஷா, கவுன்சிலர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபற்றி சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில்,’’ கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு செங்கல்சூளை அமைத்து கொடுத்ததுபோல் தமிழகம் முழுவதும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு இதுபோல் அமைத்து கொடுத்து வருமானத்துக்கு வழிவகை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: