ராப்பூசலில் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் சீறிப்பாய்ந்தன.!

புதுக்கோட்டை: ராப்பூசலில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசலில் பிரசித்தி பெற்ற முனி ஆண்டவர் கோயில் திடலில் இன்று(13ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 900 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவ குழுவினர் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்டன.  வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டையொட்டி இலுப்பூர் டிஎஸ்பி அருள்மொழிஅரசு தலைமையில்  ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: