கொல்லிமலை அடிவாரத்தில் போலி மந்திரவாதி ஆக்கிரமித்த 10 ஏக்கர் அரசு நிலம் மீட்பு-வருவாய்த் துறையினர் அதிரடி

துறையூர் : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கிழக்கு பகுதியின் அடிவார கிராமம் அடுக்கம் கோம்பை. இங்கிருந்து 4 கிலோ மீது தொலைவில் திருச்சி மாவட்டத்தின் தளுகை ஊராட்சிக்குட்பட்ட த.பாதர்பேட்டை, 2 கி.மீ தொலைவில் நாகநல்லூர் கிராமம் உள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற ராஜா ராகவன்(35). இவர் போலி மந்திரவாதி என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் அடுக்கம் கோம்பை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மடாலயம் கட்டினார். மேலும் அங்கிருந்து அரசு புறம்போக்கு மற்றும் விவசாய நிலங்கள் வழியாக த. பாதர்பேட்டை வரை பாதை ஏற்படுத்த முயற்சித்தார்.

அதற்கு த.பாதர்பேட்டை பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலி மந்திரவாதியும் துறையூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி வழக்கு தொடுத்தார். இதில் கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணை தேதியில் த.பாதர்பேட்டையை சேர்ந்த 83 பேர் ஆட்சேபனை மனு தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் போலி மந்திரவாதி ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 10 ஏக்கரையும் விவசாயிகள் நிலம் 4 ஏக்கரையும் மீட்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட குழு நிர்வாகிகள், விவசாயிகள், பெண்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் நாமக்கல் ஆர்டிஓ மல்லிகா தலைமையில், நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி சேகர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ், கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு உடனே அகற்றப்படும் என்று உறுதி கூறியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இந்நிலையில் நாமக்கல் வருவாய் துறை அதிகாரிகள் போலீசாருடன் அடுக்கம் கோம்பை கிராமத்தில் உள்ள கார்த்திகேயனின் மடாலயத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை வெளியேற்றி சீல் வைத்தனர்.

Related Stories: