பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை விவகாரம் ஓபிஎஸ் தம்பி, போலீஸ் அதிகாரிகள் குற்றத்தை ஐகோர்ட்டில் நிரூபிப்போம்: கோபியில் வக்கீல் பேட்டி

கோபி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த வக்கீல் ப.பா.மோகனுக்கு கோபியில் தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் அளித்த பேட்டி:

தற்போது சமூக நீதிக்கான ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. சாட்சிகளுக்கும், வக்கீல்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தமிழக அரசின் கடமை. பாடத்திட்டத்திலேயே சாதி மறுப்பு திருமணங்கள், சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளத்தில் காசி விஸ்வநாதர் கோயில் பூசாரி நாகமுத்துவை சாதியை சொல்லி திட்டியதோடு, போலீசாரை வைத்து பல்வேறு வழக்குகள் போட வைத்ததால், அவர் கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கையும் எடுத்து நடத்தி  வருகிறோம். பூசாரி நாகமுத்து தற்கொலைக்கு ஓ.ராஜா மட்டும்  காரணமில்லை. அவருக்கு துணையாக இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பலரையும்  சாட்சியாக சேர்த்து உள்ளனர். அந்த சாட்சிகள்தான் குற்றத்திற்கு துணை  புரிந்து உள்ளனர். அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க உச்சநீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளது. அது முடிவடைந்ததும் அந்த வழக்கு நடத்தப்படும். உண்மை நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தற்போது முழுமூச்சாக இறங்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: